சத்தியம் மக்கள் சேவை மையம்

Friday, July 3, 2009

தமிழ்த் தேசியம் சிறப்பு மாநாடு(12.07.09) அழைப்பிதழ்

திருச்சியில் 12.06.09 அன்று "தமிழ்த்தேசியம்" சிறப்பு மாநாடு

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அழைப்பு

 

3.07.09, சென்னை-17.

 

"தமிழ்த் தேசியம்" என்ற தலைப்பில் சிறப்பு மாநாடு ஒன்றை, வருகிற 12.07.09(ஞாயிறு) அன்று திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தவிருக்கிறது.

 

ஈழத்தில் சிங்கள - இந்திய இராணுவங்கள் கூட்டாக நடத்திய தமிழ் இன அழிப்புப் போரில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கெதிராக போரை நிறுத்துமாறும் சிங்கள இராணுவத்திற்கு செய்து வரும் படை உதவிகளை நிறுத்துமாறும் இந்திய அரசை வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் ஆறரை கோடித் தமிழர்களும் போராட்டங்களில் ஈடுபட்டும் இந்தியா ஏன் அசையவில்லை என்ற கேள்வியை எழுப்பியும், இந்தியா தமிழினத்திற்கு எதிரான நாடு என்பதை விளக்கியும் இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் சான்றோர்கள் உரை, இசை நிகழ்ச்சி, நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

 

திருச்சி நடுவண் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் நிலை எதிரில் ஓட்டல் அரிஸ்டோ எல்.கே.எஸ்.மாகலில் 12.07.09 அன்று காலை 9 மணியளவில் இம்மாநாடு தொடங்கி இரவு 9 மணி வரை நடக்கின்றது.

 

இசை நிகழ்ச்சி

 

மாநாட்டு அரங்கிற்கு, ஈழத்தமிழர்க்காக தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாரின் நினைவில் "ஈகி முத்துக்குமார் அரங்கம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. காலை 9 மணியளவில் சமர்ப்பா குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்குகின்றன. இதனை தோழர் இரெ.சு.மணி அவர்களால் தொடங்கி வைக்கிறார்.

 

ஓவியக் காட்சி - புகைப்படக் காட்சி

 

பின்னர், தணிக்கை அறிஞர் மு.குமரசாமி அவர்களால் ஓவியக்காட்சி மற்றும் புகைப்படக் காட்சிகள் தொடங்கி வைக்கப்படுகின்றன. தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் நா.இராசாரகுநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகின்றார்.

 

"தமிழ்த் தேசிய அரங்கு" - கருத்தரங்கம்

பின்னர் தமிழ்நாட்டு தமிழர்களின் பிரச்சினைகள் குறித்த கருத்தரங்கம் நடக்கின்றது. இதற்கு "தமிழ்த் தேசிய அரங்கு" என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் கருத்தரங்கிற்குத் தலைமை தாங்குகின்றார். "தமிழர் இழந்த நில - நீர் உரிமைகள்" என்ற தலைப்பில் முனைவர் த.செயராமன் அவர்களும், "மொழிக் கொள்கை" என்ற தலைப்பில் முனைவர் கு.அரசேந்திரன் அவர்களும், "தமிழ்த்தேசியமும் உலகமயமும்" என்ற தலைப்பில் தோழர் ம.செந்தமிழன் அவர்களும் உரையாற்றுகின்றனர்.

 

கருப்புக்குரல் - கலை நிகழ்வு

பிற்பகல் 1.30 மணியளவில் தமிழீழத் திரைப்பட உதவி இயக்குநர்கள் அமைப்பு நடத்தும் கருப்புக்குரல் கலை நிகழ்வு நடக்கிறது. இதனை ஓவியர் புகழேந்தி அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

 

பாவீச்சு

பின்னர், கவிஞர்கள் பங்கு கொள்ளும் கவியரங்கம் நடக்கிறது. இந்நிகழ்வை "திருக்குறள்" முருகானந்தம் அவர்கள் தொடங்கி வைக்கிறார். இப்பாவீச்சில், பாவலர்கள் தமிழேந்தி, கவித்துவன், கவிபாஸ்கர், முழுநிலவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாவீச்சு நிகழ்த்துகின்றனர்.

 

"தமிழீழ அரங்கு" - கருத்தரங்கம்

தமிழீழப் பிரச்சினை குறித்த கருத்தரங்கிற்கு "இப்படிக்கு" இதழின் ஆசிரியர் வீ.ந.சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்குகிறார். இக்கருத்தரங்கில், "ஈழமும் உலகநாடுகளும்" என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் தோழர் கண.குறிஞ்சி அவர்களும், "இந்தியமும் ஈழமும்" என்ற தலைப்பில் வழக்கறிஞர் த.பானுமதி அவர்களும், "ஈழத்தின் எதிர்காலம்" என்ற தலைப்பில் தோழர் க.அருணபாரதி அவர்களும் கருத்துரை வழங்குகின்றனர்.

 

படத்திறப்பு

அண்மையில் காலமான புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் அவர்களது திருவுருவப்படத் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. புதுச்சேரி செந்தமிழர் இயக்க அமைப்பாளர் தோழர் ந.மு.தமிழ்மணி அவர்கள் இந்நிகழ்விற்கு தலைமை தாங்குகின்றார். குடந்தைத் தமிழ்க் கழகத்தின் அமைப்பாளர் தோழர் சா.பேகன் அவர்கள் படத்தை திறந்து வைத்து உரை நிகழ்த்துகின்றார்.

 

கலை நிகழ்ச்சி

பின்னர், அரியமங்கலம் இலெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்வை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கு மண்டலச் செயலாளர் தோழர் கோ.மாரிமுத்து அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

 

கொடி எரிப்பில் சிறை சென்ற தோழர்களுக்கு பாராட்டு

மாநாட்டுத் தீர்மானங்களை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு அவர்கள் படிக்கிறார். அதன் பின்னர் ஈழத்தில் தமிழின அழிப்புப் போரில் ஈடுபட்டுள்ள இந்திய - சிங்கள கூட்டுப் படையினரைக் கண்டித்து இந்திய இலங்கைக் கொடிகளை எரித்து சிறைக்கு சென்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர்களுக்கும் பாராட்டு விழா நடக்கிறது. மொழிப்போர் ஈகி ப.பெரியசாமி அவர்கள் தோழர்களுக்கு பாராட்டுப் பத்திரங்கள் வழங்கி சிறப்பிக்கிறார்.

 

நிறைவரங்கம்

மாலை 6 மணியளவில் நடக்கும் நிறைவரங்கத்திற்கு பாவலர் பரணர் அவர்கள் தலைமை தாங்குகின்றார். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, இயக்குநர் மணிவண்ணன், எழுத்தாளர் அமரந்தா, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, மகளிர் ஆயம் அமைப்பாளர் தோழர் மதுரை அருணா, அனைத்து மாணவர் கூட்டமைப்பு அமைப்பாளர் தோழர் ஈரோடு இராம்குமார் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

 

மாநாட்டின் நிறைவாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் எழுச்சியுரையாற்றுகிறார். தோழர் வே.க.இலட்சுமணன் நன்றி நவில்கிறார்.

 

மாநாட்டிற்கு உதவிகள் செய்வது, தங்குமிட வசதிகள் மற்றும் மாநாட்டு ஏற்பாடுகுள் குறித்த அனைத்து விதமான தொடர்புகளுக்கும் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி மாநகரத் தலைவர் தோழர் கவித்துவன் அவர்களை 9791883533 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.










--
Posted By தமிழ்த் தேசியன் to தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி at 7/03/2009 09:54:00 AM
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 11:31 AM 0 comments