சத்தியம் மக்கள் சேவை மையம்

Monday, May 14, 2007

மேதா பட்கர் புதுச்சேரி வருகை


சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர்
புதுச்சேரி வருகை


சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் ஒரு நாள் பயணமாக வரும் மே 17 வியாழனன்று புதுச்சேரி வருகிறார்.

இந்திய அளவில் புகழ் பெற்ற சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர், நர்மதா அணைக் கட்டுவதால் பழங்குடியினர் வாழும் பல கிராமங்கள் முற்றிலுமாக அழிவதை எதிர்த்து தொடர்ந்துப் போராடி வருபவர். அதோடு மட்டுமல்லாமல் சுற்றுச் சூழல் எங்கு பாதிக்கப்பட்டாலும் அதை எதிர்த்துப் போராடுவதில் முன்னணியில் நிற்கும் களப்பணியாளர்.

தமிழகத்தில் கடந்த 15-02-2007 அன்று கூடங்குளம் பகுதியில் அணுமின் நிலையம் கட்டப்படுவதால் ஏற்படும் ஆபத்தை மக்களுக்கு விளக்கும் வகையில் நடைபெற்ற போராட்டத்திலும் கலந்துகொண்டு, அதை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்தார். போராடும் மக்களுக்கு ஆதரவளித்தார்.

இது போன்று மக்கள் உரிமைகளுக்காகப் பாடுபட்டு வரும், சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் புதுச்சேரிக்கு வருகிறார்.

புதுச்சேரியில் தனியார் பங்கேற்புடன் துறைமுக விரிவாக்கத் திட்டம் ஒன்றை அரசு கொண்டு வருகிறது. சுற்றுச் சூழலுக்கும், நிலத்தடி நீருக்கு பெரும் கேடு விளைவிக்கும், மீனவ கிராமங்களை அழிக்கும், ஒட்டுமொத்த புதுச்சேரிக்கே எதிரான இத்திட்டத்தை எதிர்த்து தேங்காய்த்திட்டு மக்களும்,ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களும் போராடி வருகின்றனர். துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென்று பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

ஆனால், புதுச்சேரி அரசு இத்திட்டத்தைக் கைவிட மறுத்து வருகிறது. முதல்வர் ந.ரங்கசாமியை பலமுறை சந்தித்து முறையிட்டும் எந்த பயனும் இல்லை. துறைமுகம் வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி ஒரு உயர்மட்ட வல்லுநர் குழு அமைத்து அதன் பரிந்துரைகள்படி முடிவு எடுப்போம் என முதல்வர் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். ஆனால், இதுநாள் வரை வல்லுநர் குழு கூட அமைக்கப்படவில்லை. இதனால், போராடும் மக்கள் அரசு மீது நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

எனவே, போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும், புதுச்சேரி அளவில் நடைபெறும் இப்போராட்டத்தை அகில இந்திய அளவில் விரிபடுத்தவும், போராட்டத்திற்கு ஆதரவு திரட்டவும், சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கரை புதுச்சேரிக்கு அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது. போராடும் மக்களின் அழைப்பை ஏற்று, அவர் மக்கள் போராட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி வருகிறார்.

வரும் மே 17 வியாழனன்று காலையில் மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர், மதியம் புதுச்சேரி வந்து சேருகிறார். போராட்டம் நடத்தி வரும் தேங்காய்த்திட்டு மக்களைச் சந்திக்கிறார். கடந்த 13-04-2007 அன்று சவப்பாடை ஊர்வலம் நடத்தி துறைமுகத் துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வல்சராஜ் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தி்ன் போது போலீஸ் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.

புதிதாக துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படவுள்ள இடங்களைப் பார்வையிடுகிறார். ஏற்கனவே கட்டப்பட்ட அரியாங்குப்பம் துறைமுகத்தையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் நேரிடையாக பார்க்கிறார். மேலும், இத்துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் பாதிக்கப்படும் மீனவர் கிராமங்களை பார்வையிடுவதோடு, மீனவ மக்களையும் சந்திக்கிறார். பிறகு நடக்கும் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மாலையில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இக்கூட்டத்தில், புதுச்சேரியின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய இயக்கத் தலைவர்கள், மனித உரிமை அமைப்பினர் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் வருகை துறைமுக விரிவாக்கத் திட்டப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
செய்திக்கு நன்றி: கோ.சுகுமாரன்
www.kosukumaran.blogspot.com
 

செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 9:17 PM 0 comments

Thursday, May 10, 2007

ஈழதமிழர்கள் கைது: புதுச்சேரியில் கண்டன பேரணி


ஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை
விடுதலை செய்யக்கோரி
புதுச்சேரியில் மாபெரும் கண்டன பேரணி
புகைப்படம்: தினகரன்
நன்றி : தினமலர்
------------------------------------------------------------------------------------------------------------------------

ஈழதமிழர் கைது பிரெஞ்சு தூதரகம் நோக்கி கண்டன பேரணி

புதுச்சேரி, மே 11: பிரான்சு நாட்டில் 17 ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கண்டன பேரணி நடத்தி யது.

சிங்காரவேலர் சிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணியில் பாமக துணை பொதுச்செயலாளர் அனந்த ராமன் எம்.எல்.ஏ., அம்பேத் கர் தொண்டர் படை மூர்த்தி, மீனவர் விடுதலை வேங்கை கள் மங்கயர்செல்வன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாறன், விடுதலை சிறுத்தைகள் பாவாணன், வணங்காமுடி, பெரியார் திராவிடர் கழகம் லோகு.அய்யப்பன், மதிமுக சந்திர சேகரன், பகுஜன்சமாஜ் தங்க,கலைமாறன், ராஷ்டிரிய ஜனதாதளம் சஞ்சீவி, கவுன்சிலர் சக்திவேல் உள் பட பல்வேறு சமுக அமைப் புகளை சேர்ந்த வர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணி பழைய பஸ் நிலையம், அண்ணாசாலை வழியாக பிரெஞ்ச் தூதரகம் நோக்கி சென்றது. பேரணியில் பிரெஞ்சு அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட் டது.
அம்பலத்டையார் மடம் வீதி, மிஷன்வீதி சந் திப்பில் போலீசார் பேரணி யில் வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் பிரெஞ்சு தூத ரகத்திற்கு சென்று பிரெஞ்சு தூதரிடம் மனு கொடுத்த னர்.
நன்றி: தினகரன்
------------------------------------------------------------------------------------------------------------------------
பிரான்ஸில் ஈழத் தமிழர்கள் 17 பேர் கைது: புதுச்சேரியில் கண்டனப் பேரணி

புதுச்சேரி, மே 11: பிரான்ஸில் கைது செய்யப்பட்ட 17 ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பிரெஞ்ச் தூதரக அலுவலகம் நோக்கி பல்வேறு தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் வியாழக்கிழமை கண்டனப் பேரணி நடத்தின.

ஈழத்தமிழர்கள் சிங்கள அரசின் நடவடிக்கைகளால் துயரம் அடைந்து வருகின்றனர். பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து மனிதாபிமான உதவிகளைப் பெற்று அதனை ஈழத்தமிழர்களுக்கு அங்கிருந்த 17 ஈழத்தமிழர்கள் அனுப்பி வைத்தனர். இந் நிலையில் இலங்கை அரசின் பேச்சை நம்பி பிரான்ஸ் அரசு அந்த 17 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்துள்ளது.

இந்த 17 ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் பிரெஞ்ச் தூதரக அலுவலகம் நோக்கி கண்டனப் பேரணி நடைபெற்றது. இப் பேரணிக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். பாமக எம்எல்ஏ ஆர்.கே.ஆர்.அனந்தராமன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் சுகுமாரன், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த இருதயராஜி, அம்பேத்கர் தொண்டர் படையைச் சேர்ந்த தி.மூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த ஆ.பாவாணன், வணங்காமுடி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பைச் சேர்ந்த மங்கையர் செல்வன், வீராம்பட்டினம் கவுன்சிலர் சக்திவேல், செந்தமிழர் இயக்கம் தமிழ்மணி, மதிமுக சந்திரசேகரன் உள்ளிட்ட பல்வேறு இயங்கங்கள் பங்கேற்றன.

பின்னர் 10 பேர் கொண்ட குழுவினர் புதுச்சேரி பிரெஞ்ச் தூதரக பெண் அதிகாரி ஜெல் ராயட்டை சந்தித்து ஈழத் தமிழர்கள் 17 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி மனு அளித்தனர்.
நன்றி : தினமணி
------------------------------------------------------------------------------------------------------------------------
புதுச்சேரியில்
ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக்கோரி ஊர்வலம்
பிரெஞ்சு தூதரகத்தில் மனு கொடுக்கப்பட்டது

புதுச்சேரி, மே. 11-

புதுவையில் ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக்கோரி ஊர்வலம் நடந்தது. மேலும் பிரெஞ்சு தூதரகத்தில் மனுவும் கொடுக்கப்பட்டது.

ஈழத்தமிழர்கள் கைது

பிரான்சு நாட்டில், புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து மனிதாபிமான உதவிகளைப்பெற்று ஈழத்தமிழர்களுக்கு அனுப்பி வைத்த 17ஈழத்தமிழர்களை சிங்கள அரசின் புகாரினை தொடர்ந்து பிரான்சு அரசு கைது செய்துள்ளது.

இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

ஊர்வலம்

புதுவையிலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கைதான ஈழத்தமிழர்களை விடுவிக்கக்கோரி ஊர்வலம்-ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் நேற்றுகாலை சிங்காரவேலர் சிலையருகில் திரண்டனர்.

அங்கிருந்து கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு பெரியார் திராவிடர் கழக தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். அனந்தராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டம்

ஊர்வலத்தில் அம்பேத்கார் தொண்டர் படை மூர்த்தி, மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர்செல்வன், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பாவாணன், வணங்காமுடி, ம.தி.மு.க. சந்திரசேகரன், பகுஜன்சமாஜ் கட்சி இருதயராஜ், செந்தமிழர் இயக்க தமிழ்மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேருவீதி, மிஷன்வீதி வழியாக அம்பலத்தடையார் மடத்துவீதியை அடைந்தது. அதற்குமேல் ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. அதைத்தொடர்ந்து ஊர்வலமாக வந்தவர்கள் அங்கேயே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன்பின் முக்கிய பிரமுகர்கள் பிரெஞ்சு தூதரகத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
நன்றி : தினத்தந்தி

-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 10:31 PM 0 comments

வன்முறைக்கு தினகரன் ஊழியர்கள் 3 பேர் பலி : கண்டனம்

வன்முறைக்கு தினகரன் ஊழியர்கள் 3 பேர் பலி
: கண்டனம் :


மதுரை தினகரன் அலுவலகம் மு.க.அழகிரி ஆட்களால் 09-05-2007 புதனன்று அடித்து நொறுக்கப்பட்டது. கட்டடத்திற்கும் தீவைக்கப்பட்டது. இதில் தினகரன் ஊழியர்கள் 3 பேர் உடல்கருகி இறந்தனர். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 10-05-2007 வியாழனன்று வெளியிட்ட அறிக்கை:

திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்து கருத்துக்கணிப்பு வெளியிட்டதற்காக மதுரை தினகரன் அலுவலகம் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிந்த அப்பாவி ஊழியர்கள் 3 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும், இத்தாக்குதல் நடந்தபோது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ததுக் கொண்டு இருந்துள்ளனர். தங்கள் கடமையிலிருந்து தவறிய மதுரை போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தாக்குதல் சம்பவம் குறித்து மத்திய அரசு உடனடியாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

ஜனநாயகத்தின் நன்காவது தூணாக விளங்கும பத்திரிகை துறை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கே விடப்பட்ட சவால் என்பதால் அனைவரும் இதைக் கண்டிக்க வேண்டும்.

தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
 
தினகரன் ஊழியர்கள் மீதும், பத்திரிக்கை சுதந்திரம் மீதும் தாக்குதலுக்கு சத்தியம் மக்கள் சேவை மையம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது..
 
தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
 
அனுதாபத்துடன்,
க.அருணபாரதி
தலைவர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்

செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 9:09 PM 0 comments