சத்தியம் மக்கள் சேவை மையம்
Thursday, September 13, 2007
உண்ணாவிரதம் இருக்கும் பழ.நெடுமாறன் மீது போலிசார் அடக்குமுறை
|
Posted: 13 Sep 2007 07:04 AM GMT-06:00 இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் இன்று (13-09-2007) வியாழக்கிழமை சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்துள்ளார். அவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்டோர் நேரில் சந்தித்துப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சென்னை கோயம்பேட்டில் பழ.நெடுமாறன் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை இன்று காலையில் தொடங்கினார். அப்போது அந்த வளாகத்துக்குள் அனுமதியின்றி உள்நுழைந்த தமிழகப் போலிசார் உண்ணாவிரதப் போராட்டப் பந்தலைப் பிரித்துப் போட்டு, இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தக் கூடாது என்று கூறியுள்ளனர். மேலும் மூத்த தலைவரான பழ.நெடுமாறனின் கையைப் பிடித்து இழுத்துள்ளனர். "இது எங்களுக்குச் சொந்தமான இடம். இங்கே உண்ணாவிரதம் இருப்பதை யாரும் தடுக்க முடியாது" என்று அங்கிருந்தவர்கள் போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைப் படம் பிடித்த "சன்" தொலைக்காட்சி உள்ளிட்ட பத்திரிகைத் துறையினரைப் போலிசார் தாக்கியுள்ளனர். இதனால் காவல்துறையினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே அங்கு மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து போலிசார் வெளியேறினர். சென்னையில் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை பழ.நெடுமாறன் மெற்கொண்டதைத் தொடர்ந்து, அவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் செயலாளர் தியாகு, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், தமிழக அன்னையர் முன்னணியின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி, சமூக நீதிக் கட்சியின் தலைவர் ஜெகவீரபாண்டியன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் அங்கு திரண்டுள்ளனர். போலிசாரின் அடக்குமுறையை அனைவரும் கண்டித்துள்ளனர். பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் இருக்கும் பகுதிக்குள் செல்ல செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் யாரையும் போலிசார் அனுமதிக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் வளாகத்திற்கு வெளியே போலிசார் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. செய்தியறிந்து தமிழகம் முழுவதுமுள்ள தமிழ் உணர்வாளர்கள் சென்னையை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றனர். |
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 9:18 PM
0 Comments:
Post a Comment
<< Home