சத்தியம் மக்கள் சேவை மையம்

Monday, June 4, 2007

பட்டினிச்சாவின் விளிம்பில் யாழ். குடாநாட்டின் 5 லட்சம் மக்கள்

பட்டினிச்சாவின் விளிம்பில் யாழ். குடாநாட்டின் 5 லட்சம் மக்கள்
ஞாயிற்றுக்கிழமை, 3 யூன் 2007, 06:16 ஈழம் அ.அருணாசலம்
நன்றி: புதினம் 
 

யாழ். குடாநாட்டுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு குறைந்த அளவு கப்பல்களே உள்ளதனால் அங்கு வாழும் 5 லட்சம் மக்கள் பட்டினிச்சாவின் விளிம்பில் இருப்பதாக மனிதாபிமான அமைப்புக்கள் கடந்த வாரம் தெரிவித்துள்ளன.

இந்த அச்சறுத்தலினால் யாழ். குடாநாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 75 வீதங்களாக அதிகரித்துள்ளன. இது மக்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். குடாநாட்டில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்களில் 20 வீதமான உணவுப் பொருட்களையே கொண்டு செல்லக்கூடியதாக உள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உலக உணவுத் திட்டத்தின் பணிப்பாளர் ஜெப்ஃ ரப்ற் டிக் தெரிவித்துள்ளதாவது:

யாழ். குடாவில் உள்ள மக்களின் தேவைக்கு மாதத்திற்கு 1,000 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் தேவை. அரசினது கப்பல்களில் போதிய இடவசதிகள் இல்லாததால் உலக உணவுத் திட்டம் ஒரு மாதத்திற்கு 200 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களையே தற்போது தருவித்து வருகின்றது.

 


எனினும் கடந்த 3 மாதங்களாக இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு விநியோகம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 11 ஆம் நாளில் இருந்து இன்று வரை 200 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களையே உலக உணவுத் திட்ட அமைப்பு குடாநாட்டுக்கு தருவித்துள்ளது.

யாழ். குடாநாட்டில் தற்போது 250 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களே கையிருப்பில் உள்ளன. நிவாரண உணவுப் பொருட்களின் விநியோகம் கடந்த ஏப்பிரல் மாதம் முதல் வாரத்தில் வழங்கப்பட்ட பின்னர் உணவுப் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அது இடைநிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ். குடாநாட்டில் மட்டுமல்லாது மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலும் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பில் உள்ள 138,597 இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர உணவு உதவிகள் தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு தேவைப்படும் உணவின் அளவில் 11 வீதமான உணவுப் பொருட்களே கடந்த மாதம் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

படப்பிடிப்பு: போராளி கஜானி
நன்றி: அப்பால் தமிழ்

------------------------------------------------------------------------------------------ 
நன்றி : புதினம் செய்திகள்
------------------------------------------------------------------------------------------ 
 
இதற்கிடையே
ஈழத்தமிழர்களுக்காக தமிழக மக்களிடம் திரட்டப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை
இந்திய செஞ்சிலுவை சங்கம் மூலம் ஈழத்திற்கு அனுப்புவதற்கு
அனுமதி மறுத்த மனிதநேயமற்ற மத்திய அரசை கண்டித்தும்
உணவுப் பொருட்களை உடனடியாக ஈழத்திற்கு அனுப்பக் கோரியும்
சென்னையில்
நாளை(05-06-07) செவ்வாய் அன்று
தமிழர் தேசிய இயக்கத் தலைவரும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு தலைவருமாக திரு.பழ.நெடுமாறன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது...
------------------------------------------------------------------------------------------ 
 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 12:27 AM

0 Comments:

Post a Comment

<< Home