சத்தியம் மக்கள் சேவை மையம்

Monday, June 11, 2007

செவ்வணக்கம் தோழர்களே......ஒரு வேண்டுகோள்...

செவ்வணக்கம் தோழர்களே......
 
ஈழத்தில் நம் தமிழ் மக்கள் பட்டினி கிடப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஈழத்தமிழ் மக்களுக்கு உதவ வேண்டியது நமது கடமையாகும். இதனை உணர்ந்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு கடந்த திசம்பர் மாதம் எடுத்த முடிவின் பேரில் கடந்த சனவரி முதல் தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக உதவ உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் சேகரிக்கும் பணி நடைபெற்றது. சேகரிக்கப்பட்ட அப்பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் ஈழத்திற்கு அனுப்ப தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்திருந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஏனோ அதற்கு அனுமதி மறுத்து வருகிறது. 
 
மனிதநேயற்ற முறையில் நடந்து கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், அப்பொருட்களை மனித நேய உணர்வுடன் ஈழத்தமிழ் மக்களுக்கு கொடுத்து உதவவும் வேண்டி சென்னையில் கடந்த 5ம் திகதி சூன் 2007 அன்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான பழ.நெடுமாறன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. பெரும் திரளான தமிழ்இன உணர்வாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
 
அந்நிகழ்வின் ஒரு பகுதியாக தமிழக முதல்வருக்கு இது குறித்து மடல் அனுப்ப முடிவுசெய்யப்பட்டது. அதற்கான மடலும் வெளியிடப்பட்டுள்ளது. 
 
கீழ்க்கண்ட கடிதத்திற்கு நகல்கள் எடுத்து பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் ஆகியோருக்கு வழங்கி அவற்றை உடனடியாக முதலமைச்சருக்கு அஞ்சல் அல்லது தொலைநகலி ஆகியவற்றின் மூலம் அனுப்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
 
முதலமைச்சருக்கு அனுப்ப வேண்டிய கடிதம்
 

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்
முதலமைச்சர், தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.
மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களுக்கு,
வணக்கம். இலங்கையில் யாழ்ப்பாணம் செல்லும் சாலையை மூடி யாழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் செல்லவிடாமல் சிங்கள அரசு தடுத்து வருவதன் விளைவாக சுமார் 5 இலட்சம் மக்கள் பட்டினியுடன் வாடுகிறார்கள் என்ற செய்தியை அறிந்து தமிழக மக்களிடம் உணவுப் பொருட்கள் மருந்துகள் ஆகியவற்றைத் திரட்டி அனுப்பி வைப்பது என முடிவுசெய்து கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி இதற்கான முயற்சிகளைத் தொடங்கினோம். தமிழகம் பூராவிலும் பல்வேறு அமைப்புகளும், தனிநபர்களும் மனித நேய உணர்வுடன் இம்முயற்சியில் ஈடுபட்டு உணவு மருந்துப் பொருட்களைத் திரட்டினர். அவற்றைக் கையளிக்கும் விழாக்களும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றன.
சுமார் 1 கோடி ரூபாய் பெறுமானமுள்ள அரிசி, மற்றும் மருந்துப் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழக நிர்வாகிகளைச் சந்தித்து இப்பொருட்களைக் கையளிப்பது குறித்துப் பேசினோம். அவர்களும் இப்பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கத் தலைமைக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்கள்.
கடந்த 14-02-07 அன்று இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் இப்பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைப்பதற்கு இந்திய அரசின் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்து பல நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆனாலும் இதுவரை இப்பொருட்களை அனுப்புவதற்கான அனுமதி கிடைக்கவில்லை.
சேகரிக்கப்பட்ட அரிசி, பருப்பு போன்றவை பூச்சி, வண்டுகள், எலிகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் அபாயமும் சேகரிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் காலாவதியாகிவிடக்கூடிய அபாயமும் உள்ளன. உரியவேளையில் இவை யாழ் மக்களுக்குக் கிடைக்கும்படி செய்தால்தான் பயன் உண்டு. பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கும், மருந்துகள் பற்றாக்குறையினால் பெரும் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் நோயாளிகளுக்கும் உதவவேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டு மக்கள் திரட்டித்தந்த இந்தப் பொருட்களை அனுப்பவிடாமல் இந்திய அரசு தாமதம் செய்வது சரியல்ல.
இந்திய செஞ்சிலுவைச் சங்கம் உலக ரீதியில் இயங்கக்கூடிய பொதுவான அமைப்பு. அதன் மூலம் இப்பொருட்களை அனுப்ப நாங்கள் முயற்சிசெய்கிறோமே தவிர வேறு சட்டவிரோதமான வழியில் அல்ல.
எனவே தாங்கள் உடனடியாகத் தலையிட்டு இந்திய அரசிடமிருந்து உரிய அனுமதியைப் பெற்றுத் தந்து இப்பொருட்களை பட்டினியால் வாடும் யாழ் மக்களுக்கு அனுப்ப உதவும்படி வேண்டிக்கொள்கிறோம்.
அன்புள்ள,

முதலமைச்சரின் தொலைநகலி எண்

044-28111133

 
தோழமையுடன்
க.அருணபாரதி
தலைவர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 3:47 AM

0 Comments:

Post a Comment

<< Home